Saturday, June 28, 2014

நான், மாயன் மற்றும் இந்த மெக்ஸிகோ

அயல்நாட்டு மண்ணில் கால் பதித்ததும் - ஓர்
அன்னியம் தொற்றிக் கொண்டது...
மாயர்கள் என் இனம் என்று சொன்னார்களே!
மாயனின் மாயம் தான் இந்த தேசம் எனச் சொன்னார்களே!
இவர்களும் நானும் பங்காளிகள் என்றல்லவா நினைத்தேன்...
இந்த அன்னியம் என்னை ஏதோ செய்கிறது...
கடைக்கு செல்கிறேன், காசும் இருக்கிறது - ஆனால்,
கடன் சுமப்பவன் போல் - ஓர் கலக்கம்;
பக்கத்துக்கு வீட்டுக்காரனிடம் பேசலாம் என்றால் -
ஐந்து மாதங்களில் - அடைத்த கதவு அசைவது கூட இல்லை...
கடலில் குதிக்கிறேன்;
ஆனாலும், என் மரினாவின் சுடு மனல் போல் சுகம் இல்லையே.
மலையில் தடம் பதிக்கிறேன்;
எனினும் கிரிவல பாதை போல் கிளர்ச்சி இல்லையே.
ஒன்றிரண்டு ஓலையில் பனை தரும் நிழல்;
ஓட்டு வீட்டில் அத்துமீறி நுழையும் நிலவு;
சுதந்திரமாய் திரியும் நாய்கள்;
சுடச் சுட அமுது தரும் தேநீர் கடை;
தெருவிற்கு ஓர் கோயில்;
வெண்டை, முருங்கை, வெள்ளாடு, வேம்பு -
எங்கு போனது என் சொர்க்கம்?
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு -
சரியாகதான் சொல்லி இருக்கிறான் - என் பாடனுக்குப் பாட்டன் -
அவன் தேடியும் கிடைக்கவில்லை போலும்!