ஒரு ஆணின் ஆசை
அழ வேண்டும்;
நான் அழ வேண்டும்;
காட்டுக்குள்ளாவது போய் கதறி அழ வேண்டும்;
நானோ, வானோ என மக்கள் எண்ண வேண்டும்;
யார் அழுகிறார் எனும் கேள்வி கூடாது;
ஒரு ஆண் அழுகிறான் என்று ஆச்சர்யம் கூடாது;
ஒப்பாரி வைப்பது போல் - ஓ-வென அழ வேண்டும்;
ஊரே அலுவல் பார்க்க ஒய்யாரமாய் அழ வேண்டும்;
கிடைத்தது, கிடைக்காதது, முடிந்தது, முடியாதது - என
எல்லாம் நினைத்து அழ வேண்டும்;
ஏமாற்றம், அசிங்கம், துரோகம், பொய்,
அவமானம், தோல்வி, வலி, வேதனை, விரக்தி, இயலாமை
எதையும் மறவாமல் அழ வேண்டும்;
குழந்தை போல் அழ வேண்டும்;
குமுறிக் குமுறி அழ வேண்டும்;
குடம் குடமாய் அழ வேண்டும்;
கோபம் தீரும் வரை அழ வேண்டும்;
தேம்பி தேம்பி அழ வேண்டும்;
தேடித் தேடி அழ வேண்டும்;
தெளிந்து தெளிந்து அழ வேண்டும்;
இனி அழ ஒரு துளி கண்ணீரும் இல்லா வண்ணம் அழுதே தீர்க்க வேண்டும்;
நான் அழ இனியொரு நாள் கிடைக்குமா?
இனிதொரு நாள் கிடைக்குமா?